திங்கள், 18 மார்ச், 2019

பெரியார் - மணியம்மை திருமணம்; ராஜாஜி பெரியாருக்கு எழுதிய கடிதம் என்ன?



உண்மைத் தகவலை வெளிப்படுத்தினார் கழகத் தலைவர்


வேலூர், மார்ச் 11 பெரியார் - மணியம்மை திருமணம்பற்றி ராஜாஜி பெரியாருக்கு எழுதிய கடிதம் என்ன? என்ற உண்மைத் தகவலை வெளிப்படுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

10.3.2019 அன்று வேலூரில் நடைபெற்ற அன்னை மணியம்மையார் பிறந்த நாள் - நூற்றாண்டு விழாவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

‘‘பொடிப் பெண்ணை அன்னை என்று சொல்லாமல், வேறு என்ன என்று சொல்லுவது?''


புரட்சிக்கவிஞர் அவர்களைப்பற்றி, இங்கே பாராட் டப் பெற்ற முனைவர் மங்களமுருகேசன் அவர்கள் சொன்னார்கள்.

புரட்சிக்கவிஞர் அவர்கள், எவ்வளவு கடுமை யாக விமர்சித்தார், அம்மா அவர்களுடைய திருமணத்தின் போது என்று நினைக்கின்றபொழுது,

அதே புரட்சிக்கவிஞர்,

‘‘இந்தப் பொடிப் பெண்ணை,  தொண்டறம் செய்கின்ற பெண்ணை,  பெரியார் கவலைப்படாமல்,  மூலையில் புத்தகம், சுவடுகள்  விற்றுக் கொண்டிருக்கிறாரே, அந்த அம்மையார் பெரியாரைக் காப்பாற்றுவதற்காக, மாலை கள் ஏராளம் பெரியாரின் தோளின்மீது விழுகிறது. இந்தப் பாவியாவது ஒரு சிறு பூவையாவதுஎடுத்து, அந்தப் பெண்ணுக்குக் கொடுத்திருப்பாரா? இந்தத் தொண்டறம் செய்யும் பொடிப் பெண்ணை அன்னை என்று சொல்லாமல், வேறு என்ன என்று சொல்லுவது!'' என்று எழுதியிருக்கிறார். அதைப் படிக்கும்பொழுதெல்லாம் கண்ணீர் வரும்.

இராஜகோபாலாச்சாரியார் - உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரையில் மூளை என்று எல்லோராலும் வர்ணிக்கப்பட்டு, மிகப்பெரிய பதவிக்குப் போனவர். பெரியாருடைய உற்ற நண்பர். சட்ட ரீதியான சில யோசனைகள் - திருவண்ணாமலையில் வந்து கேட் கிறார்.

ஆனால், அண்ணா அவர்களுக்கும், பெரியார் அவர்களுக்கும்கூட கோவை மாநாட்டில்கூட பிரச்சி னையாக இருந்தது.

‘‘இது என்னுடைய சொந்த விவகாரம்; இதை நான் சொல்லவேண்டியதில்லை'' என்று தந்தை பெரியார் அவர்கள் அழுத்தம் திருத்தமாக சொன்னார்.

அதற்கு என்ன காரணம்? யாருக்குமே தெரியாது.

இந்த இயக்கத்தைப் பிளப்பதற்கு ஆரியம்தான் முடிவு செய்தது என்று குற்றம் சொன்னார்கள். அப்பொழுதுகூட பெரியார் அவர்கள் வாயைத் திறக்கவில்லை.

பெரியாரே சொல்லாதபொழுது, அன்னை மணி யம்மையார் அவர்கள் பெரியாருடைய தொண்டர். பெரியாரை வாழ வைத்தாலே போதும்; இயக்கம் வளரும்; கொள்கை பரவும் என்று கருதியவர்கள். எனவேதான், அவர்களும் வாய் திறக்கவில்லை.

உண்மை என்னவென்றால், பெரியார் செய்யும் ஏற்பாடு சரி வராது என்றுதான் இராஜாஜி எழுதினார்.

தாக்கி எழுதப்பட்ட கடிதங்களைப்


பெரியார் பாதுகாத்து வைத்திருக்கிறார்


அய்யாவும் மறைந்து, இராஜகோபாலாச்சாரியாரும் மறைந்து, அதற்குப் பிறகு அண்ணாவும் மறைந்து, அதற்குப் பிறகு, கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது வெளியிட்டார்.

கடிதங்கள் அத்துணையும் பாதுகாப்பாக இருக் கின்றன; பெரியாரைத் தாக்கி கொச்சையாகத் தாக்கி எழுதப்பட்ட கடிதங்களைப் பெரியார் பாதுகாத்து வைத்திருக்கிறார். பெரியார் எப்பொழுதும் பாராட்டுக் கடிதங்களைப் பாதுகாத்து வைக்க மாட்டார்; அந்தப் பாரம்பரியம் எங்களுக்கும் உண்டு.

எனக்கும் அடிக்கடி இப்படிப்பட்ட கொச்சையான, ஆபாசமான தாக்குதல் நிறைந்த கடிதங்கள் வரும். என்னைப்பற்றி, என் குடும்பத்தைப்பற்றி, என் வாழ் விணையரைப்பற்றியெல்லாம்.

நான் பெரியாரின் தொண்டன், பெரியாரிடம் பழகியவன் என்கிற காரணத்தினால்,  உடனடியாக அதுபோன்ற கடிதங்களைப் பத்திரப்படுத்தி, என்னுடைய துணைவியாரிடம் காட்டுவேன். உன்னைப் பாராட்டி கடிதம் வந்திருக்கிறது, அதைப் படித்துப் பார் என்பேன்.

மிகப்பெரிய அளவிற்கு இந்த இயக்கத்தை நோக்கி வீசப்பட்டவைகளையெல்லாம் பெற்றுத்தான், எரு வாக்கித்தான், இந்தப் பயிர் செழிப்போடு வளர்ந் திருக்கிறது; உரமாக்கிக்கொண்டு வளர்ந்திருக்கிறது.

‘‘அந்தரங்கம்'' ‘‘கான்பிடென்சியல்''


அந்த அடிப்படையில் பார்க்கின்றபொழுது, இராஜகோபாலாச்சாரியார் அவர்களுடைய கருத்து என்னவென்றே தெரியாமல் எல்லோரும் சொன்னார்கள்.

கலைஞர் அவர்களிடம் ஒருமுறை சொன்னேன்,

‘‘அப்படியா? எனக்குத் தெரியாதே இதுவரை'' என்றார்.

அந்தக் கடிதத்திற்குமேல், கவர்னர் ஜெனரல் கையெழுத்துப் போட்டு எழுதியிருக்கிறார். ‘‘அந் தரங்கம்'' ‘‘கான்பிடென்சியல்'' என்று. அவருடைய கையெழுத்திலேயே எழுதியிருக்கிறார்.

கோபாலகிருஷ்ண காந்தி அவர்களிடம் அந்தக் கடிதத்தைக் காட்டியபொழுது அவர் வியந்து போனார்.

தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பவில்லை; நாகரிகத்தைப் பாதுகாக்க விரும்பினார்


‘‘இப்படியொரு மாமனிதர்களா?'' என்று.

இராஜகோபாலாச்சாரியார் அவர்கள், பெரியாரின் நண்பர்தான். நானாகவோ, நீங்களாகவோ, ஒரு சாரசரி மனிதர்களாக இருந்தால், நம்மைக் கடுமையாக விமர்சிக்கும்பொழுது, ‘‘அவர் சொல்லித்தான் இப்படி நடந்துகொண்டார்; திருமணம் செய்தார் என்று. இல்லை இல்லை, அவர் மாறான கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார் என்று காட்டி, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்பார்கள்.

பெரியார், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பவில்லை. நாகரிகத்தைப் பாதுகாக்க விரும்பினார்; மனிதநேயத்தைப் பாதுகாக்க விரும்பினார்.

தன்னுடைய நண்பர், எதிர் நிலையில் இருந்தவர், ‘‘அந்தரங்கம்'' என்று எழுதியிருக்கிறார்,, அதனை வெளியிடக் கூடாது. ஆயிரம் தாக்குதல்களுக்கு நாம் ஆளாகலாம்; ஆனால், ரகசியத்தை வெளியிடக்கூடாது என்று கருதினார் அய்யா.

பெரியாரிடம் இருந்த கட்டுப்பாடு; பெரியாரிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. பெரியாரிடமிருந்து எப்படி பாடம் கற்றுக்கொள்கிறோமோ, அதேபோல, அன்னை மணியம்மையார் அவர்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டிய செய்திகள் ஏராளம் உண்டு.

இங்கே நீங்கள் காணொலி காட்சிகள்மூலம் பார்த் திருப்பீர்கள். பெரியார் அவர்கள், என்னிடம் சொன்னார், சுயமரியாதைத் திருமணம் சட்டம் வடிவம் கொண்டு வந்தபொழுது, அதனைத் திருத்துவதற்கு முதலமைச்சர் அண்ணா அவர்களை சந்தித்தபொழுது இரவு ஒரு மணி; அப்பொழுதுதான் அவர் கோப்புகளைப் பார்ப்பார்.

‘‘இனிமேல் நான் ரொம்ப நாளைக்கு இருக்கமாட்டேன்''


‘‘முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், அய்யாவிற்கு வயிற்று வலி ஏற்பட்டது; அய்யாவினால் சரியாக உணவு உண்ண முடியாமல் சங்கடப்படுவார்; அப்படிப் பட்ட அய்யாவை இவ்வளவுக் காலம் காத்தவர் மணியம்மையார் என்று முதலமைச்சர் அண்ணா என்னிடம் கூறினார். அன்றைக்கு அய்யா அவர்கள் எழுதியவற்றை அன்றைக்கு விடுதலையை எடுத்துப் பார்த்தால் தெரியும்; ‘‘இனிமேல் நான் ரொம்ப நாளைக்கு இருக்கமாட்டேன்'' என்று எழுதினார். அதற்குப் பிறகு அய்யா அவர்கள் 50 ஆண்டுகாலம் வாழ்ந்தார். காரணம், அன்னை மணியம்மையார் அவர்கள், தன்னுடைய வாழ்வை அய்யாவிற்கு அர்ப்பணித்தார்கள். அதன் காரணமாகத்தான், அம்மா அவர்கள் 60 வயதைத் தாண்ட முடியவில்லை.

உடல் வலிமை இல்லை; நலிவு. நலிவோடு அவர்கள் அய்யாவைப் பாதுகாக்கவேண்டும் என்று முயற்சி எடுத்தார்களே தவிர, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்காதவர் அவர். அது சமுதாயத்திற்காக, தனக்காக அல்ல. எந்த நோக்கத்திற்காக அவரிடம் சென்றோமோ, அது நடைபெறவேண்டும் என்பதற்காக.

அய்யாவின்தொண்டறம்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால், பெருந் தன்மை, மனிதநேயத்தைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டுமானால், திராவிட முன் னேற்றக் கழகம், வெற்றி பெற்றவுடன் பெரியாரை எதிர்ப்பார் என்று எல்லோரும் நினைத்தார்கள்.  அண்ணா அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், அய்யாவைச் சந்தித்தார்கள். அப்பொழுது என்ன நடந்தது என்பதை இங்கே ஒளி - ஒலி காட்சியில் உங்களுக்கு அற்புதமாக விளக்கிக் காட்டினார்கள்.

‘‘பெரியாருக்கு அரசு மரியாதை கொடுப்பதினால் என்னுடைய ஆட்சி போனாலும் பரவாயில்லை!''


அய்யா மறைந்துவிட்டார்; கலைஞர் முதலமைச்சர்; அரசு மரியாதை கொடுக்க நினைத்தார். அதனால், உங்களுடைய ஆட்சி போய்விடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கிறார்கள்.

‘‘பெரியார் அவர்களுக்கு அரசு மரியாதை கொடுப் பதினால், என்னுடைய ஆட்சி போகுமானால், அதை நான் பெருமையாகக் கருதுகிறேன்'' என்று சொன்னவர், நம்முடைய தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். அந்தத் துணிச்சல் வேறு எவருக்கும் வராது.

அய்யா அவர்கள் மறைந்தவுடன், அவர் பிறந்த ஈரோட்டு இல்லம் நினைவிடமாக ஆக்கப்படும் என்று முதலமைச்சர் கலைஞர் சொல்லுகிறார்.

‘‘பெரியார் - அண்ணா நினைவகம்''


அந்த இடம் பெரியார் அறக்கட்டளையைச் சேர்ந் தது; உடனே அம்மா அவர்கள், எந்தவிதமான பணமும் அதற்கு வாங்கவேண்டாம்; அரசுக்கு நாம் இலவசமாகக் கொடுப்போம்.

‘‘பல ஆண்டுகாலம் அண்ணா அவர்கள் ‘விடுதலை' ஆசிரியராக இருந்தபொழுது, பெரியாரின் இல்லத்தை ஒட்டிய இடத்தில்தான் குடியிருந்தார்கள். ஆகவே, பெரியார் - அண்ணா நினைவகம் என்று பெயர் வையுங்கள்'' என்று அம்மா அவர்கள் சொன்னார்கள். பல பேருக்கு இந்தத் தகவல் தெரியாது.

இதுவரையில் தலைவர்கள் பெயரில் திறந்த நினைவகங்களில் இரண்டு பெயர்கள் உண்டா? ஒரே ஒரு விதி விலக்கு இந்தியாவிலேயே இருக்கிறது என்றால், அதுதான் ‘‘பெரியார் - அண்ணா நினைவகம்'' ஈரோட்டில். இரண்டு பேரையும் பிரிக்கப்பட முடியாத அளவில்.

தன்னைத் தூற்றினார்களே, தன்னை பழித்தார்களே என்று அம்மா அவர்களுக்கு அந்த எண்ணமே இல்லை.

புறநானூற்றுத் தாய் என்றார் கலைஞர்


கடலூரில், வாள் கொடுத்துப் பாராட்டினார். இன்றைய ‘விடுதலை'யில் இருக்கிறது. புறநானூற்றுத் தாய் என்று கலைஞர் அவர்கள் அருமையாகப் பாராட்டி, அவருடைய கவிதை வரிகளில் சொன்னார்.

இது ஒரு பக்கத்தில் இருந்தாலும், நெருக்கடி காலத்தில், நாங்கள் எல்லாம் மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில், அன்னையார் அவர்கள், இயக்கத்திற்குத் தலைமை தாங்கி, ‘விடு தலை'யும், ‘முரசொலி'யும் நெருக்கடி காலத்தில் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டன. அந்த நேரத்தில், அதையும் சமாளித்துக் கொண்டு, இயக்கத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்.

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.



- விடுதலை நாளேடு, 11.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக