திங்கள், 18 மார்ச், 2019

அமெரிக்காவிலிருந்து குரல் தழுதழுக்க டாக்டர்  ஜான்சன்  நெகிழ்ச்சி தரும் பேட்டி

"அய்யாவின் ஆற்றல், அம்மாவின் அன்பு, ஆசிரியரின் துணிவு! என்றும் எங்கள் நெஞ்சம் விட்டு அகலவே அகலாது!"

அமெரிக்காவிலிருந்து குரல் தழுதழுக்க டாக்டர்  ஜான்சன்  நெகிழ்ச்சி தரும் பேட்டி




அய்யா, தங்களுடன் பேசுவதில் மிகுந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைகிறோம்.

மிக்க மகிழ்ச்சி.

துடிப்பான இளைஞர் (Young Chap) ஆக தந்தை பெரியாருடன் இருக்கும் படங்களில் உங்களைப் பார்த்திருக்கிறோம். அய்யா மிகுந்த மகிழ்வோடு அமர்ந் திருப்பார்கள் அந்தப் படங்களில்! தந்தை பெரியாருக்கு படிப்பதற்கு உருப்பெருக்கிக் கண்ணாடி (Reading Glass) வாங்கிக் கொடுப்பதும் நீங்கள் தான் என்று ஆசிரியர் அய்யா சொல்வார்கள்!

ஆம். அய்யாவுடைய அன்பு என்னால் மறக்கவே முடியாது. அவ்வளவு கவர்ந்துவிட்டது. நான் சிறு பிள்ளையைப் போல எதையாவது வாங்கிக் கொண்டு வந்து அய்யாவுக்குக் கொடுத்துக் கொண்டிருப்பேன். ஒரு சின்ன பொம்மையிருந்தது, அதில் தாடியிருந்தது, அய்யாவுக்கு வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தேன். ஆசிரியர் சிரித்துக்கொண்டே கேட்டார், 'இது என்ன என்று தெரியுமா? என்று! நான் சொன்னேன், எனக்குத் தெரியாது அந்த பொம்மையில் தாடி இருந்தது, அய்யாவுக்கும் தாடி இருக்கிறது. அதனால் கொண்டு வந்து கொடுத்தேன் என்று! "யோசமைட் சாம் என்ற கார்ட்டூனில்" காட்டுவான். அந்த பொம்மையை வாங்கிக் கொடுத்தேன். எனக்கு மருத்துவத்தில் ஒரு சிறிய பிரிவு தான் தெரியும். அதைத் தவிர வேறு விசயங்களில் நான் கவனம் செலுத்தியதில்லை. கல்லூரிக் காலத்திலிருந்தே அப்படி இருந்துவிட்டேன்.

அய்யா உங்கள் மீது காட்டிய அன்பு எத்தகையது அய்யா?

(ஓரிரு நொடிகள் அமைதிக்குப் பிறகு பதில் வருகிறது)

வயதான காலத்தில் ஒரு பிள்ளையைப் பெற்றால், எவ்வளவு அன்பு வைத்திருப்பார்களோ, என் மீது அவ்வளவு அன்பு காட்டினார்கள் அய்யா அவர்கள். அன்றைக்கு அய்யாவுக்கு மருத்துவம் பார்த்தவர் களில் நீங்கள் தான் இளைஞர். அய்யா விடம் உரிமை எடுத்து பழகக் கூடிய வராகவும் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். 'அய்யாவிடம் உரிமையுடன் ஒரு மகனைப் போல பழகியவர் நீங்கள்' என்று ஆசிரியர் அவர்களே குறிப்பிட்டுச் சொல்வார்!

அப்போது எனக்குத் தெரியாது, நான் எவ்வளவு பெரிய மனிதரோடு பழகிக் கொண்டிருக்கிறேன் என்று! எனக்கு அரசியலே தெரியாது.  அண்ணா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த சமயத்தில், சி.எம்.சி. மருத்துவமனையில் இருந்த என்னை அழைத்து வந்தார்கள். எனக்கு அப்போது கலைஞர் யார், நெடுஞ்செழியன் யார் என்றெல்லாம் கூட தெரியாது. எப்படி இருக்கிறார் என்று யாராவது கேட்டால் கூட, நீங்கள் மருத் துவர் சதாசிவம் இருக்கிறார், அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவேன். அப்போது அண்ணாவைப் பார்க்க அய்யா அவர்கள் வந்திருந்தார்கள். வயதானவர் என்ற மரியாதை! அந்த அளவோடு நின்றுவிட்டேன். எனக்கு அருகில் இருந்தவர்கள் சொன் னார்கள். இவர்தான் பெரியார்.கடவுள் இல்லையென்று சொல்பவர் என்று சொன்னார்கள். ஓ, கடவுள் இல் லைன்னு சொல்வாரா? அப்போ கவனிக்கக் கூட வேண்டாம் என்று விட்டுவிட்டேன் நான். அய்யா இதைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.

பிறகு, மெடிக்கல் செக் அப்புக்காக டாக்டர் பட் அவர்களைப் பார்க்க வேலூர் சி.எம்.சி.க்கு வந்தார்கள். அவர் அப்போது பெரிய சர்ஜன். அய்யாவுக்கு குடலிறக்க நோய் (இரணியா) இருந்ததால் அதைச் சரி செய்ய வந்திருந்தார்கள்.

அப்போது பட் அங்கிருந்து வந்தார். பெரியார் உன்னைப் பார்க்க வேண்டும் என்கிறார். நீ தான் டெஸ்ட் செய்ய வேண்டும் என்கிறார் என்றார் பட்.

எதற்கும் பயப்படாத சிங்கம்!


அய்யா எதற்கும் பயப்படாதவர். சிங்கம் மாதிரி இருப்பார். உயிருக்கே பயப்படாதவராச்சே! அவருக்குக் கொள்கை தான் முக்கியம். பட் அழைத்ததும், நான் வந்துவிட்டேன். இன்ஜெக்சன் போட்டு சோதனை செய்யும் நேரத்தில் வலி இருக்கும். அய்யா வலிக்குதா? என்றேன். என் கையைப் பிடித்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டு, இப்போ வலி ஒன்னும் இல்லங்க என்கிறார். கண்ணிலிருந்து கண்ணீர் ஒழுகியது என் கைகளில்! நானும் கூட சேர்ந்து அழுவது போல் ஆகிவிட்டேன்.

ஆபரேசன் செய்தபிறகு, நானும் டாக்டர் பட் அவர்களும் அய்யாவைப் பார்க்க வந்தோம். நாங்கள் நெகிழும்படி அவர் தன் நன்றியை வெளிப்படுத்தினார். அன்றைக்கு அழுது விட்டேன் நான். (குரல் தழு தழுக்கிறது)

அன்றிலிருந்து   Ayya was my Father; Grand Father  எல்லாம். அந்த அன்பினால் என்னை அடிமையாக்கி விட்டார்.

ராமுகாரியத் படப்பிடிப்பு


அப்புறம், அம்மா... மணியம்மையார் கூட. வீட்டுக்குச் சென்றால் ரொம்ப அன்பாக இருப்பார்கள். அம்மா மாதிரி இருப்பார்கள். வயதில் எனக்கு ரொம்ப மூத்தவர்கள் இல்லை. 13 ஆண்டுகள் தான் மூத்தவர். ஆனாலும், அம்மா என்றழைப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை.

ராமுகாரியத் தெரியுமா உங்களுக்கு, செம்மீன் பட இயக்குநர். அவர் ஒரு முறை என்னிடம் வந்து ஜான்சன், அய்யாவைப் படம் எடுக்க வேண்டுமே என்றார். பிறகு ஆசிரியர் அவர்கள் மூலம் அய்யாவிடம் அனுமதி கேட்டு, நானும் எடுத்தேன். என்னிடம் ஒரு 16 எம்.எம் கேமரா இருந்தது. ராமு காரியத் அவர்கள், ஆட்களைக் கொண்டுவந்து புரொபஷனாக எடுத்தார். அய்யா எப்போவெல்லாம் வாய்ப்பிருக்கிறதோ என்னை அழைப்பார்கள். நானும் சென்றுவிடுவேன்.

தஞ்சாவூரில் ஒரு முறை ஒரு பெரிய விழா ஒன்றை வைத்துவிட்டு என்னை அழைத்தார்கள். எனக்குத் தெரியாது எதற்கு அழைக்கிறார் என்று. நான் தஞ்சாவூரில் பிறந்தவன் என்பது அய்யாவுக்குத் தெரியும். வீரமணி அய்யா வந்து என்னை அழைத்தார். உங்களை அய்யா அழைக்கிறார். நீங்கள் தான் போட்டோ எடுப்பீர்களே, வாருங்கள் நீங்களும் என்றார். போட்டோ எடுக்கிறது தானே, நானும் வருகிறேன் என்று சென்றுவிட்டேன். அங்கே போய் நான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று அழைத்து எனக்குப் பொன்னாடை போர்த்திவிட்டார்கள். நான் எதிர்பார்க்கவில்லை. பன்னாடைக்கு ஒரு பொன்னாடை என்று கிண்டலடிப்பார்களே, அப்படி! (சொல்லிச் சிரிக்கிறார்.)

ராமு காரியத் அவர்கள் உங்களிடம் கேட்டார் என்று சொன்னீர்கள். அவர் எப்படி உங்களிடம் கேட்டார்? அவருக்கு என்ன ஈர்ப்பு தந்தை பெரியாரிடம்?

அய்யோ... பெரியார் மீது மரியாதை இல்லாதவர்கள் யார் இருக்கிறார்கள்? ராமு காரியத் பெரிய இயக்குநர். நான் அய்யாவைப் படம் எடுப்பதைப் பார்த்திருக்கிறார். அதனால் என் மூலம் கேட்டு அனுமதி பெற்று அய்யாவின் அன்றாட வாழ்க்கையை காட்சிப் பதிவு செய்தோம்.

ஒரு முறை, அய்யாவுடன் காரில் போய்க் கொண்டிருந்தோம். ரேடியோ செய்தியில் சொல்கிறார்கள். ராஜாஜி மறைந்துவிட்டார் என்று.  அய்யா அழுதுவிட்டார், ராஜாஜி போய்விட்டாரா?"என்று. அவ்வளவு நல்ல மனது. கொள்கையில் சண்டை போடக் கூடியவர்கள் அல்லவா இருவரும். ஆனாலும் அன்பு! கொஞ்சம் தெரிந்தவர்களும் கூட அய்யா மீது பெரும் மரியாதை வைத்திருப்பார்கள். டாக்டர் பட் ஒரு பார்ப்பனர். ஆனால், அய்யா மீது பெரும் மரியாதை கொண்டவர். அவர் பல நேரங்களில் பிசியாக இருப்பதால், நான் பல நேரம் அய்யா அழைத்ததும் சென்றுவிடுவேன். நான் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பேன். ரேடியாலஜி டிபார்ட்மெண்ட் தான் என்பதால், நான் என் நேரத் துக்கு ஏற்ப வகுப்பு நடத்திக் கொண்டு, அய்யா அழைத்தால் ஓடிவந்துவிடுவேன். நான் பல்வேறு சூழல் காரணமாக அமெரிக்கா வந்துவிட நேர்ந்தது. அம்மா கூட ஆசிரி யரிடம் சொல்லி வருந்துவார்களாம். இயக்கத்தோடெல் லாம் நெருக்கமாக இருந்ததால் தான் அவருக்கு இப்படி நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள் என்று!

அன்னை மணியம்மையார் தந்தை பெரியாரை எப்படி பார்த்துக் கொண்டார்கள்?

அவர்களுக்கு இரு பெரும் Qualities. ஒன்று அன்பு; மற்றொன்று பண்பு.  All Great men have two people behind him  என்பார்கள்.   One is wife, and another is Secretary மனைவி, செயலாளர். அம்மா இரண்டுமாக இருந்தார்கள். She was a wonderful Secretary. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார்கள்.அய்யாவுக்கு வேண்டிய அனைத்தையும் கவனித்துக் கொண்டார்கள். ஒரு முறை ராமு காரியத் படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, அவர் கேட்டுக் கொண்டதற்காக சாப்பாடு கொண்டு போய் கொடுப்பதைப் போல  மாதிரி உள்ளே வந்தார்கள். அய்யா பசியில் இருந்திருப்பார் போல, அம்மா சாப்பாடு கொண்டுபோய் வைத்ததும், அய்யா இயல்பாக சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். பிறகு அதையும் படமாக்கினோம்.

அய்யாவை அவ்வளவு கவனித்துக் கொண்டார்கள். அம்மா இருந்ததனால் தான் அய்யாவின் உடல்நிலை நன்றாக இருந்தது. எங்கு போனாலும், அய்யாவுக்கு வேண்டியதை சமைத்து, கட்டுப்பாடாக அவருக்கு உணவு கொடுத்து கவனித்துக் கொண்டார்கள். அய்யாவைப் பார்க்க வருபவர்களையும் அன்பாக உபசரிப்பார்கள்.

அய்யாவின் உடல்நிலை காக்க, அய்யாவே அடம்பிடித்தாலும் அம்மா தான் மிகவும் கவனமாக இருப்பார்கள் என்று சொல்வார்களே?

சில நேரங்களில் அப்படி இருப்பார் அய்யா. ஆனால், அம்மா சொன்னால் கேட்டுக் கொள்வார்கள். அம்மாவும் விட மாட்டார். நான் சொன்னேன் அல்லவா? எல்லா மனைவியரும் கணவன்மாரிடம் கொஞ்சம் கூடுதல் உரிமை எடுத்துக் கொள்வார்கள் தானே. செயலாளர்கள் நமக்காக எல்லாம் செய்யக் கூடியவர்கள் தான். ஆனால், நாம் சத்தம் போட்டால் செக்ரட்டரி அடங்கிவிடுவார்கள். மனைவி கேட்கமாட்டார் அல்லவா? நமக்கு எது நன்மையோ அதைத் தான் செய்வார்கள். அம்மாவுக்கு அந்த குவாலிட்டி இருந்தது. ரொம்ப  rare quality.

அய்யாவுடன் இறுதிக் காலத்தில் உடன் இருந்தவர் தானே நீங்கள்?

நான் இருந்தேன் அப்போது - வேலூரில். ஆம், அய்யா மறையும் போது நான் உடனிருந்தேன். அதை நினைத் தால் இன்னும் கூட குலுங்குகிறது. (தழுதழுக்கிறார்)

கடைசி நேரத்தில் அய்யாவிற்கு மேற்கொண்ட சிகிச்சையின் போது கூட, இன்ன சிகிச்சை செய்கிறோம் என்று சொல்லி அய்யாவிடம் அனுமதி கேட்டபோது, 'ஜான்சன் என்ன சொல்கிறான்' என்று கேட்டார். நான் போய் அய்யாவிடம் சொன்னபிறகு தான் ஒப்புக் கொண்டார்கள். ஆனாலும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. (குரலில் கலக்கம். அதனைத் தொடர்ந்துசில நொடிகள் அமைதி) அய்யாவுக்கு அப்படி ஆகிவிட்டது. (குரலில் தேம்பலும், தழுதழுப்பும் கேட்கிறது) (நீங்கள் மேற்கொண்ட முயற்சி அய்யாவின் ஆயுளை நீட்டிக்கத் தானே அய்யா என்று சமா தானப்படுத்தி அடுத்து பேச்சை மாற்றினோம்.)

அய்யாவின் மறைவை அம்மா எப்படி எடுத்துக் கொண்டார்கள்?

பெரும் இழப்பில் இருந்த அம்மா, அதன் பிறகு இயக்கத்தில் முழுமையாக இறங்கி விட்டார்கள். இந்திராகாந்தி எமர்ஜென்சி கொண்டு வந்து இயக்கத்துக்கு பெரும் நெருக்கடி கொடுத்தார்கள். இயக்கத்தை மிரட்டி,  Ban செய்வோம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த போது, அய்யாவின் வேலையை அம்மா செய்யத் தொடங்கி விட்டார்கள்.   She stepped in the gap  என்று சொல்வதைப் போல,  She stepped  in the right time. சரியான நேரத்தில் களத்தில் இறங்கினார்கள்.

ஆசிரியர் அவர்களுடனான உங்கள் நட்பு எத்தகையது? அவர் அன்றைக்கு உங்களைப் போலவே இளைஞர்... இன்றைக்கும்... (என்று கேள்வியை முடிப்பதற்குள்ளாக பதில் வருகிறது)

அவரு பம்பரம். அவரைப் பார்த்தாலே நமக்கு தலை சுற்றுகிறது. நான் அந்தக் காலத்தில் கலாட்டா செய்வேன். வீரமணின்னா நல்லா தைரியம் இருக்கு. வைரம் மாதிரி. வைரமணி அவரு... உடைக்க முடியாது. But It can cut the glasses.     

இப்போ அதுக்கும் மேல ஒரு படி போயிட்டாரு. வைரஸ் ஆயிட்டாரு. அய்யாவின் கொள்கைகளைக் கொண்டு பலரையும் தாக்கிக் கொண்டிருக்கிறார். He has been infecting lot of people with அய்யா கொள் கைகள். அதனால்,   virus infection  மாதிரி அவரை நிறுத்த முடியாது. ஆனால், அய்யாவைப் போலவே என் மீது அன்பு அவருக்கு. எப்போதும்! நான் எதுவும் செய்ததில்லை அவருக்கு. எப்படி எந்த அன்பு என்று தெரியவில்லை.

என் மனைவி டாக்டர்! ஆசிரியரின் மனைவி மோகனா அம்மையாருக்கு என் மனைவி நெருக்கம். இப்போது நாங்கள் நல்ல சகோதரர்கள் மாதிரி! எங்கள் குடும்பமே ஆசிரியர் மீதும் பெரும் மதிப்பும், அன்பும் கொண்டவர்கள். அதுவே எனக்குப் பேறு!

அம்மா பிறந்த வேலூரில், அய்யா மறைந்த அதே வேலூரில், தான் பணியாற்றிய வேலூரில் அன்னையார் நூற்றாண்டு விழா நடப்பதில் மகிழ்ந்து, அதில் பங்கேற்க முடியவில்லையே என்னும் வருத்தத்தையும் பதிவு செய்தார். அய்யாவுடனான தன் நினைவுகளைப் பகிரும் போது அந்தக் குரலில் அத்தனை குதூகலம். அம்மா, ஆசிரியர் என்னும் பெயர்களைச் சொல்லும்போது உற்சாகம். இத்தனை வயதுக்குப் பின்னாலும், இத்தனை தொலைவில் இருப்பினும், இந்த இயக்கத்தின் மீதான அக்கறை. அனைத்தையும் அந்தக் குரலில் உணர முடிந்தது.

செவ்வி: சமா.இளவரசன்

-  விடுதலை நாளேடு, 11.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக