வியாழன், 14 மார்ச், 2019

ஓராண்டு முழுவதும் அன்னையார் நூற்றாண்டு விழா!

செய்தியாளர்களுக்கு தமிழர் தலைவர் பேட்டி


அன்னை மணியம்மையார் அவர்களின் 100ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2019) காலை சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் கழகத் தலைவர் தலைமையில் மகளிர் அணி தோழியர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.


சென்னை, மார்ச் 10, அன்னை மணியம் மையார் பிறந்த வேலூரில் அவரின் நூற்றாண்டு விழா இன்று தொடங்குகிறது. ஓராண்டு முழுவதும் அவர்களின் நூற்றாண்டு விழா கிராமங்கள் தோறும் கொள்கைப் பிரச்சார விழாவாக நடைபெறும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

அன்னை மணியம்மையார் 100ஆவது  ஆண்டு பிறந்த நாள் (10.3.2019) விழாவையொட்டி, சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம் மையார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து கழகத் தலைவர் தலைமையில் கழகத் தோழர்கள் உறுதியேற்றுக்கொண்டனர்.

பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. செய்தி யாளர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா இன்று முதல் தொடங்குகிறது. தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் வாழ வைத்தவர்  அன்னை மணியம்மை யார். அவர் கண்ட இயக்கத்தை, அதற்கு மேலும் அய்ந்தாண்டு காலம்  வலிவோடும், பொலி வோடும் காப்பாற்றி, நெருக்கடி காலம் என்ற ஒரு பயங்கரவாதம் இயக்கத்தின்மீது பாய்ந்த போது, அதனைத் தடுத்து தாய்க்கோழி குஞ்சுகளைக் காப்பாற்றுவதைப்போல காப்பாற்றிய பெருமை அன்னை மணியம்மையார் அவர்களுக்கு உண்டு; தொண்டர்களையும், இயக்கத்தையும் காப்பாற்றிய பெருமைக்கும் சொந்தக்காரர்.

இதுபோலவே, ஒரு மிகப்பெரிய பண்பாட்டுப்படையெடுப்பாக இருக்கக்கூடியது ராம்லீலா என்பது; வடநாட்டிலே  அவர்கள் ராவணனையும், மற்றவர்களையும் கொளுத்துகின்ற அந்த நிகழ்வை ஒரு அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் நடத்துவது என்பதை எதிர்த்து, மிகப்பெரிய அளவில் "ராவண லீலா" என்ற ஒன்றை நடத்தி இந்தியாவையே கிடுகிடுக்கச் செய்த பெருமை அன்னை மணியம் மையார் அவர்களுக்கே உண்டு.

எல்லாவற்றையும்விட,அன்னையார் அவர்கள் உடல் நலிவுற்ற போதிலும், தன்னுடைய சொந்த சொத்துகள், அவர்களுக்கு தந்தை பெரியார் அளித்த சொத்துகள், மக்கள் அளித்த அன்பளிப்புகள் எல்லா வற்றையும் சேர்த்து"பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக்கழகம்"என்ற  பெயரில் ஒரு டிரஸ்டை - பொது அறக்கட்டளையை உருவாக்கி அதில் தன்னுடைய சொந்த பந்தங்களுக்கு இடமில்லாமல் பார்த்துக் கொண்டு, மிகமுக்கியமான   ஒரு திட்டத்தை அறிவித்து, கல்வி நிலை யங்களையும், மருத்துவமனைகளையும்   நாடுதழுவிய அளவிலே ஏற்பாடு செய்தார்கள். அதனுடைய விளைவுதான் இன்றைக்கு 38 ஆவது ஆண்டில் நடந்துகொண்டிருக்கக்கூடிய பெரியார் மகளிர் பாலிடெக்னிக்காக தொடங்கி, இன்றைக்கு அனைத்து மாணவர் களுக்கும் இடம் கொடுக்கின்ற பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக் னிக், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் மருந்தியல் கல்லூரி, அதுபோலவே அன்னை நாகம்மையார் அவர்கள் பெயராலே திருச்சியிலே ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் என்பதை உருவாக்கி, அந்த இல்லத்தில் வளர்ந்த பிள்ளைகள் டாக்டரேட், பிஎச்.டி., முதற் கொண்டு படித்து வெளியே வருவதற்கும், 34 பெண்களுக்கு  திருமணமும் செய்துவைத்து அவர்களுடைய வாரிசுகளுக்கும்கூட இன்றைக்கு நல்ல தொழில்படிப்பைக் கொடுக்கக்கூடிய அளவிற்கு வளர்ப்பதற்கு காரணமானவர் அன்னை மணியம்மையார் அவர்கள். அவருடைய தொண்டறத்தைத் தொடருவோம் என்பதுதான் இன்றைக்கு எடுக்கக்கூடிய சூளுரையாகும்.

பாலின சமத்துவத்திற்கு பல்வேறு விரோதமான போக்குகள் நடைபெறுகின்றன. பாலினக்கொடுமைகளையும், பெண்களை வெறும் பாலினப்பண்டமாகப் பார்த்து அடிமைகளாக ஆக்கும் நிலைகளையும் எதிர்த்து இந்த ஆண்டு முழுவதும் அன்னை மணியம்மையார் அவர் களுடைய நூற்றாண்டு விழாவிலே தொடர்பிரச்சாரத்தை கிராமங்களி லிருந்து தொடங்கி நடத்துவது என்று நாங்கள் உறுதி ஏற்றிருக்கிறோம்.

இன்றைக்கு வேலூரிலே அவருடைய நூற்றாண்டு விழா தொடக் கம். சென்னையிலே அந்த நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பாக இருக்கும். இந்த நூற்றாண்டு விழாவையொட்டி ஒரு தனி அறக்கட்டளை "ஈவெ.ரா.மணியம்மை பவுண்டேஷன்" என்று உருவாக்கப்பட்டு, அதற்கு  வருமான வரி விலக்கு மத்திய அரசு அளித்திருக்கிறது என்ப தனையும் பெருமையோடு சொல்லி, அனைவரும் அந்த அற நிறுவனத் தில் பங்கேற்கவேண்டும். அதன்மூலமாக மேலும் பல கல்வி நிலையங்கள், கல்வி எட்டாத கிராமங்களுக்கு சென்று எட்ட வேண்டும் என்ற பணியை ஓராண்டுத் திட்டமாக முன்னிறுத்தி நடத்திக் கொண்டிருக்கிறோம்.

- விடுதலை நாளேடு, 10.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக