திங்கள், 18 மார்ச், 2019

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் பெருமிதம்

எதிர்ப்புகளை எருவாக்கி வளர்ந்த கொள்கைப் பாசறை திராவிடர் கழகம் -


5 தலைமுறையாக இயக்கத்தில் இருக்கக் கூடிய தொண்டர்களின் கழகம் இது!




வேலூர், மார்ச் 11  எதிர்ப்புகளை எருவாக்கி வளர்ந்தது திராவிடர் கழகம் - 5 தலைமுறையாகக் கழகத்தில் இருக்கக்கூடிய தொண்டர்கள் நிறைந்தது திராவிடர் கழகம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

10.3.2019 அன்று வேலூரில் நடைபெற்ற அன்னை மணியம்மையார் பிறந்த நாள் - நூற்றாண்டு விழாவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

பிறவிப் பேதம் என்பது அழிக்கப்படவேண்டும்


கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே, நண்பர்களே, தாய்மார்களே, பொதுமக்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மேடை, அருமை அம்மா அவர்களுக்கு நூற்றாண்டு விழா மேடை என்பது மட்டுமல்ல, இந்தக் கொள்கை வெற்றியை அகிலத்திற்குப் பறைசாற்றக்கூடிய ஒரு அற்புதமான நிகழ்ச்சி.

பெண் என்றால், ஆமை

பெண் என்றால், ஊமை

பெண் என்றால், அடிமை என்று இருக்கக்கூடிய ஒரு சனாதன மதம் உள்ள சமுதாயத்தில்,

பெண் - ஆணுக்குச் சமம்

எந்த வகையிலும் பிறவிப் பேதம் என்பது அழிக் கப்படவேண்டும் என்ற நோக்கில் சுயமரியாதை இயக் கத்தைத் தொடங்கிய அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள், ஜாதி ஒழிப்பை மட்டும் மய்யப்படுத்தவில்லை. பிறவி இழிவு ஒழிப்பு, பிறவிப் பேதம் அகற்றம் ஜாதி ஒழிப்பு இவற்றோடு,

உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி

பார்ப்பான் - பறையன்

பிராமணன் - சூத்திரன் என்ற அந்த பேதங்கள் மட்டு மல்ல, அதைவிட பஞ்சமன் என்று சொல்லப்படுகின்ற பேதங்கள் மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக,

ஆண் எஜமானன் - பெண் அடிமை என்ற பிறவிப் பேதம் இருக்கிறதே, அந்தப் பிறவி பேதத்தையும் நீக்க வேண்டும் என்று அளவில் பாடுபட்டார்கள்.

உலகம் முழுவதும்


வழிகாட்டக் கூடிய கொள்கை


திராவிடர் கழகம் தஞ்சை மாநில மாநாட்டில் வெளி யிட்ட திராவிட இயக்கக் கொள்கை விளக்க (Dravidian Manifesto) அறிக்கையில்,

எல்லா வகையான பிறவிப் பேதங்களும், அவர்கள் யாராக இருந்தாலும், பாலின பொதுமக்களாக இருந் தாலும், பாலின நண்பர்களாக இருந்தாலும், மாற்றுத் திறனாளிகளாக இருந்தாலும், திருநர்களாக இருந்தாலும், எங்கும் பேதம் இருக்கக்கூடாது என்று இது விரிவடைந்து வெற்றி பெறக் கூடியதுதான்.இந்தக் கொள்கைதான் உலகம் முழுவதும் வழிகாட்டக் கூடிய கொள்கை என்பதை அன்னை மணியம்மையார் அவர்களுடைய நூற்றாண்டு விழாவி அகிலத்திற்கே அறிவிக்கிறது.

இந்த ஊரில், இவ்வளவு பெரிய வெற்றி விழாவினை, நம்முடைய தோழர்கள் வெகுக் குறுகிய காலத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கடந்த 15 நாள்களுக்குள்ளாக இந்த சிறப்பான முயற்சிகள்!

மாநில மாநாடு தஞ்சையில் நடைபெற்றது. ஏராள மாகக் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாகக் கலந்து கொண்டது, கடைசியாக கடந்த மாதம் 23, 24 ஆகிய நாள்களில்.

பம்பரம்போன்று சுழன்று சுழன்று...


ஆனால், இன்றைக்கு அம்மா அவர்களுடைய பிறந்த நாள் என்று சொல்லும்பொழுது, இடையில் இருந்தது  ஓரிரு வாரங்கள் மட்டும்தான். அதற்குள்ளாக அவர்கள் பம்பரம்போல் சுழன்று சுழன்று பணியாற்றி இருக்கிறார்கள். முதலில்கூட அவர்களுக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால், நம்முடைய தோழர்கள் அமைப்புச் செயலாளர்கள் குணசேகரனாக இருந்தாலும், ஊமை.ஜெயராமனாக இருந்தாலும், திருவண்ணாமலை, செய்யாறு, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள அத்துணைப் பொறுப்பாளர்களும், வடாற்காடு, காஞ்சிபுரம், அரக்கோணம், பழைய வடாற்காடு மாவட்டம், காஞ்சிபுரம் உள்பட எல்லா மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் சிறப்பாக ஒத்துழைப்புக் கொடுத்திருக்கிறார்கள். அதைவிட நம்முடைய நகர மக்கள், கடைவீதியில் இருக்கின்ற வியாபாரப் பெருமக்கள் ஏராளமாக நன்கொடைகளை வாரி வாரி முகம் மலர அளித்திருக்கிறார்கள்.

பழைய வடாற்காடு மாவட்டம்


சுயமரியாதைச் சுடரொளிகள்!


இந்த இயக்கம்தான் அப்படிப்பட்ட தொண்டற இயக்கம் என்பதை, அம்மா அவர்களுடைய தொண்டை இதே நகரத்தில் அவர்கள் மிகப்பெரிய அளவிற்கு வரவேற்று இருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான், இங்கே நம்முடைய சகோதரர்கள் திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்கள் அத்துணைப் பேரும் இங்கே ஒரு குடும்பம் போல குழுமியிருக்கின்றோம். நேரத்தின் நெருக்கடியின் காரணமாக, பலருடைய பெயரை இங்கே சொல்ல முடியவில்லை.

ஒன்றை உங்களுக்கு நினைவூட்ட, அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்த கடமைப்பட்டு இருக்கிறேன்.

இந்த வேலூரில், இன்றைக்கு இவ்வளவு சிறப்பான மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால்,

1954 இல் பிள்ளையார் உடைப்புப் போராட்டம்; அந்தப் போராட்டத்தில், இங்கே மூத்த தலைவர்களாக இருந்தவர்கள் ஈ.திருநாவுக்கரசு அவர்கள், மோகன்ராசு அவர்கள், லேபர் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி பி.ஏ., அவர்கள் அதுபோல, ஏராளமான தொண்டர்கள், தோழர்கள் இருந்தார்கள். அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் கட்டளையை ஏற்று போராட்டத்திற்கு வந்தபோது, இங்கே எதிர் உணர்வாளர்கள் - இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருக்கக்கூடியவர்கள் இருக் கிறார்களே,  அன்றைக்கு இந்த ஊர்தான் அதற்கும் வழி காட்டியாக இருந்தது. அவர்களால், எங்கள் தோழர் கள் திருநாவுக்கரசு போன்றவர்களின் மண்டை உடை பட்டது. தலையில் கட்டுடன் வந்திருந்தார், பெரியார் அவர்களிடம்.

இன்றைக்கு அவர்களே வாரி வாரி வழங்கினார்கள் வியாபாரிகள் என்றால், இந்தக் கொள்கையினுடைய தேவையை  மற்றவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றுதான் அதற்குப் பொருள்.

இந்த வேலூரில் எத்தனையோ தோழர்களுக்கு  வீர வணக்கம் செலுத்தி நான் என் உரையைத் தொடங்கவேண்டும் என்றால், அதுவே ஒரு நீண்ட பட்டியலாக இருக்கும்.

அய்யா டாக்டர் முருகேசனார் அவர்கள், அவரு டைய பிள்ளைகள். வழக்குரைஞர்கள் என்று எடுத்துக் கொண்டால், மிகப்பெரிய பட்டியல் உண்டு. டீக்காராம், அவர் இங்கேயும் இருப்பார்; சென்னையிலும் இருப் பார். அதுபோல, நண்பர் செந்தாமரை அவர்கள்; வழக்குரைஞர் சமரசம் அவர்கள். லெனின், உயர்நீதிமன்ற வழக்குரைஞராக இருந்தவர். மிராசு சபாரத்தினம், ஆம்பூர் ஏ.பெருமாள், வடசேரி து.ஜெகதீசன், நடேசன், மணிவாசகம் தோழர்கள் ஒருபக்கம். இன்னொரு பக்கம் பார்த்தீர்களேயானால், நான் வேடிக்கையாக சொன்னேன், பூட்டுத்தாக்கு மின்னல் கிழார் என்ற பெயர் வராமல் இருக்காது அந்தக் காலத்தில் ‘விடுதலை' ஏட்டில்,

ஆற்காடு இளங்குப்பன், கழஞ்சூர் செல்வராஜூ, கோதண்டம், தாமோதரன் அவர்கள் பெரியாருக்கு உதவியாளராக இருந்தவர், இன்றைக்குக்கூட இங்கே வந்திருக்கிறார். சிறப்பிற்கும், பாராட்டிற்கும் உரியவர்.

அதுபோல, செய்யாறு பகுதியில் வேல்.சோமசுந்தரம், தாடி அருணாசலம், அவருடைய வாழ்விணையர் அமிர்தம் அம்மையார்,  டி.பி.சிற்றம்பலம் அவர்கள், இராவணன் அவர்கள், சாமி.சம்மாரன் அவர்கள், சத்துவாச்சாரி தோழர்களின் உழைப்பு என்பது என்றைக்கும் மறைக்க முடியாத அளவிற்கு, இந்த இயக்கத்தில் அன்றும், இன்றும் என்றும் நிலைநாட்டிக் கொண்டிருக்கக் கூடியவர்கள் சத்துவாச்சாரி தோழர்கள்.

திருப்பத்தூரை எடுத்துக்கொண்டால், ஏ.டி.கோபால், அதுபோல, ஜோலார்பேட்டையை எடுத்துக்கொண்டால், அய்யா பார்த்தசாரதி, அய்யா - அம்மா திருமணம் நடந்த காலத்தில், மற்றவர்கள் எல்லாம் எதிர்த்த காலத்தில், அதுவரையில் இயக்கத்திற்கு வராத ஜமீன்தாராக இருந்தவர்கள் அன்றைக்கு இயக்கத்திற்கு வந்து அதை செய்தவர்கள்.

அதுபோல, நம்முடைய அருமை நண்பர்கள் கே.கே.தங்கவேல், கே.கே.சின்னராசு அவர்கள், மற்ற மற்ற நண்பர்கள். கருப்புக்கொடி அவர்கள், பெருமாள் அவர்கள் என்று ஒரு பெரிய பட்டியல்.

ஆற்காடு இளங்குப்பன், வாழ்குடை வி.எஸ்.கிருஷ்ணசாமி,

திருவண்ணாமலையை எடுத்துக்கொண்டால், வையாபுரி அவர்கள், அவருடைய தந்தையார் அவர் கள். பாலகிருஷ்ணனார் அவர் காணாமல் போய், கண்டுபிடிக்கப்படவே முடியவில்லை. நீலகண்டன், ‘கிடா' கண்ணன், திருமலை, குடியோத்தம் கோவிந்தன், தண்டராம்பட்டுத் தோழர்கள் இராமச்சந்திரன், சீதாபதி அவர்கள். காட்பாடி தோழர்கள் சுப்பரமணியம், நம்முடைய பிரின்சிபல் ராமசாமி கவுண்டர் அவர் களுடைய மைத்துனர், ஆங்கிலத்தில் நன்றாக எழுதக் கூடியவர். செயின்ட் ஆர் செக்டேரியன் என்று ‘‘சங்கராச்சாரியார் யார்? என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த சுப்பிரமணியன்,

வாணியம்பாடி முன்னாள் துணைத் தலைவர் கோவிந்தராஜன், குடியாத்தத்தை எடுத்துக்கொண்டால், கோவிந்தனை மறக்கவே முடியாது; தோழர் என்று உரத்த குரலில் பேசக்கூடியவர். காமராசரையே எதிர்த்து அவர் நாமினேசன் போட்டு, தந்தை பெரியார்தான் அதற்குப் பணம் கொடுத்தார் என்று பலர் பேசிய நேரத்தில், பெரியாரின் கட்டளையை ஏற்று, வெளியே வந்தவர்கள். இப்படி ஏராளமாக ஒரு நீண்ட பட்டியலையே சொல்ல முடியும்.

தண்டராம்பட்டு இராமச்சந்திரன் போன்றவர்கள் எல்லாம் உழைத்த உழைப்பு, இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு இந்த மேடையைக் கட்டியிருக்கிறது.

இன்றைக்கு அம்மா அவர்களுடைய நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடுகின்றபொழுது, எத்த னையோ நினைவுகள். விளக்கிச் சொல்ல முடியவில்லை.

அப்பொழுது அய்யா அவர்கள் வந்திருக்கிறார்கள். கூட்டம் கோட்டைவெளி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொச்சைப்படுத்தக்கூடிய கேள்வி களை, பெரியாரிடம் கொடுத்து ரகளை செய்கிறார்கள்.

கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலே சளைக்காத இயக்கம் திராவிடர் கழகம்


அய்யா அவர்கள் கொஞ்சம்கூட அசராமல், பொறு மையாக, விளக்கமாக அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வார். கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலே சளைக்காத இயக்கம் என்றால், அது திராவிடர் இயக்கம்தான். அதற்கு ஆசானாக குருகுலத்தில் இருந் தவர் தந்தை பெரியார் அவர்கள். இதே நகரத்தில், அந்த நிகழ்வுகள் எல்லாம் ஏராளம் நடந்ததுண்டு. ஆனால், அதே நகரம் இன்றைக்கு அன்னை மணியம்மையாருக்கு நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடுகிறது.

இன்னும் சொல்லவேண்டுமானால், பல்வேறு செய்திகள் உள்ளன. எனக்கு நினைவில் இருப்பது மட்டுமல்ல, அச்செய்திகளை குறித்து வைத்திருக்கிறேன். நேரத்தின் நெருக்கடியின் காரணமாக அவற்றை வேகமாக சொல்லவேண்டும்.

வடசேரியில்தான், அய்யா அவர்கள் மறைந்த பிறகு, மாணவர்களுக்குப் பயிற்சி முகாமை அம்மா அவர்கள் தலைமையில் நடத்துவதற்கு ஜெகதீசன்தான் காரணம்.

இன்றைக்குக்கூட பேசிக் கொண்டிருந்தோம்; அய்ந்தாவது தலைமுறை அவர்களுடைய குடும்பம். சபாரத்தினம் அவர்கள், அரசியல் சட்டத்தினை எதிர்த்து மூன்றாண்டு சிறைத் தண்டனை பெற்றவர்கள்.

அய்ந்து தலைமுறையைக் கொண்ட சுயமரியாதைக் குடும்பங்கள்


அதற்கடுத்து, அவருடைய மகள் மீரா அவர்கள். அவருடைய கணவர், நம்முடைய அருமை நண்பர் தோழர் குப்புசாமி அவர்கள்.

ஜெகதீசன் அவர்கள், அவருடைய மகன் வழக்கு ரைஞர் துரை அவர்கள். அவருடைய பிள்ளை. அய்ந்து தலைமுறையைக் கொண்ட சுயமரியாதைக் குடும்பங்கள் இந்த நாட்டில் ஏராளமாக இருக்கின்றன.

அன்னை மணியம்மையார் அவர்களுடைய தொண்டறத்தின் ஒலி - ஒளி காட்சிகள்!


இந்தக் கொள்கைவயப்பட்டவர்கள்; இவர்களுடைய உழைப்பு என்பது இருக்கிறதே, அதெல்லாம் சேர்ந்ததுதான் இந்த வெற்றி என்பதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற அதேநேரத்தில், அன்னை மணியம்மையார் அவர்களுடைய தொண்டறத்தை நீங்கள் இங்கே காட்சியாகப் பார்த்தீர்கள். டாக்டர் ஜான்சன் அவர்களுடைய உரையை காணொலி மூலமாக நீங்கள் கேட்டு மகிழ்ந்தீர்கள். இங்கே வெளியிட்டுள்ள புத்தகங்கள் அவருடைய கருத்துகளை எவ்வளவு அழகாகக் கொடுத்திருக்கின்றன.

எல்லாவற்றையும்விட, உலகத்தில் அதிக மான இகழ்ச்சி; அதிகமான ஏளனம்; மிகக் கேவலப் படுத்தப்பட்ட சொற்கள்; இவை அத்தனையும் மிகப் பெரிய இடத்தில் இருந்துகூட வந்ததுண்டு. ஆனால், அத்தனையையும் தந்தை பெரியார் அவர்கள் எப்படி சந்தித்தார். அவருடைய வாழ்நாளில், பல ஊர்களில், காலி முட்டையில் நிரப்பப்பட்ட மலத்தைத் தூக்கி, பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் பேசிக்கொண்டிருந்தவர்மீது வீசினார்கள்; நாற்றமடித்துக் கொண்டிருக்கின்ற உடலில், அதைப்பற்றிக் கூட கவலைப்படாமல், தன்னுடைய சால்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு, இன்னும் வேகமாக முழங்கினாரே, தந்தை பெரியார் அவர்கள், அதைப்போல, வீசப்பட்ட அத்தனையையும் அன்னை மணியம்மையார் அவர்கள் ஏற்றுக்கொண்டு, முழுக்க முழுக்க தன்னுடைய தொண்டறத்தை அவர்கள் ஒரு வார்த்தைகூட பதில் சொல்லாமல் ஏற்றுக்கொண்டார்கள்.

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 11.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக